
தேசமொரு வேட்டையின் களம்
நாய்களாய் நரிகளாய் பற்களைத் துருத்துகின்றன
ஆசையின் வேக்காளம்
சிரிப்பென்பது விடம் தோய்ந்தக் கத்தி
வாக்குறுதிகள் மீறுவதற்கான ஒரு சொல்
கனவுகளென்றுமே கட்டாயப் பிம்பங்கள்,
இயற்கை மீளுரும் பெரும் சக்தி
வறுமையும் பிணியும் ஆதிக்கத்தினடிமை
போர்களென்பது புகழின் வெறிச் செயல்
எல்லைகளென்றுமே துண்டாடும் மந்திரம்
அரசனென்பான் அடிமைகளின் தலைவன்
கேள்வி கேட்பவன் பகுத்தறிவின் பாதி
புரட்சியென்பது சிறைகளின் சொற் கூட்டம்
மௌனமென்பது புழுக்கத்தின் கூடு
நகங்களும் பற்களும் போராட்டத்தின் கருவிகள்
தைரியம் மட்டுமே தாக்குகின்ற ஆயுதம்
தேங்கிக் கிடப்பவன் சேற்றின் புழு
சுதந்திரமென்பது விடை தராத போர்க்களம்
விழித்திருத்தலே கண்களுக்கான நியாயம்.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment