
மௌனத்தைக் கடத்தி சிறை வைக்கிறேன்,
சப்தங்களின் கூட்டுத்தொகை
வனத்தை அசைத்துப் பார்க்கிறது ,
போதி மரத்தின் கீழ்
கரையான் புற்றுகள் ஆக்கிரமிக்க,
புற்றீசல்களைப் புசிக்க
அகடூரிகள் ஆக்கிரமிப்புச் செய்கின்றன,
புத்தன் சிலையாகவே இருக்கிறான்,
அவன் மடியிலேறி
பாம்புகள் சல்லாபம் செய்கின்றன !
மௌனத்தைக் கிழித்து வந்த அம்பொன்று
சமாதானப் புறாவை சாய்த்துவிட்டுப் போகிறது,
வேடனுக்கான இரை,
வல்லூற்றுக்கென்ற விதியை யார் மாற்றுவது ?
வலிகளும் ,இழப்புகளும்
மௌனத்திற்குள் புதைந்தெழும் போது
கடலின் சீற்றம் வனத்திற்குள் நுழைந்து,
போதிமரங்களை சாய்த்துவிட்டு நகரும்
அலைகளின் நீரில்தான்
பாம்புகளும் செத்து மிதக்கின்றன
கரையான்களோடு...
இந் நிகழ்வை சுனாமி என்றும் சொல்லலாம்,
மௌனத்தின் பெருத்த கோபமென்றும் சொல்லலாம் !
நட்புடன்...முகமது பாட்சா*
19/12/2016
No comments:
Post a Comment