
கனவுகள் விரித்த குடையில்
எல்லோரும் நடந்து செல்கிறார்கள்,
கற்பனையென்பது ஒரு பூதத்தின் வாய்,
ஆசைகள் விரித்த வலை
பரந்து வியாபிக்கிறது...
மாட்டிக் கொண்டவர்கள்
மன்னனென்று மகுடம் சூட்டிக் கொள்கிறார்கள்,
தபோக்கினியின் உச்சபட்ச வெப்பம்
போதிமரத்தின் இலைகளைக் கருக்குகிறது,
நிழல் செய்த மாயைகள்
நிஜங்களைத் தேடியலைகின்றன,
நிஜமே நிழலென்று
கபர் குழிகளின் காற்றுச் சொல்கிறது,
விதைகளுக்குள் உட்கார்ந்திருக்கும் பெரும்
விருட்ச உலகம்
வனங்களை என்றும் காய விடுவதில்லை,
மரணம் வரும் போது ஞானமும் தானாக வருகிறது
ஆசைகளின் கிரீடம் தன் கைகளை
அகல விரித்துச் சிரிக்கும் அவ்வேளையில்...
தன் கால்களின் கீழ் நகரும் பூமியை
மெல்ல முத்தமிடுகிறான்,
குழியை மூடியவர்கள்
இதுதான் வாழ்க்கையென்று சொல்லிவிட்டு
கலைகிறார்கள்.
அவர்களின் கைகளில்
கனவுகள் விரித்த குடை இன்னமும் இருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment