Monday, 18 December 2017

கிழிந்த கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அந்தக் கவிதையை 
ஆளுக்கொருவராகக் கிழித்தெறிந்தார்கள், 
பெண்ணாயிருவென்று 
பொட்டிலடித்தான் அண்ணன் 
யாரவன் என்ற அப்பாவின் கையில் 
கூந்தல்கற்றைச் சிக்கிக் கொண்டது... 
அம்மா 
ஒரு மூலையில் அழுது கொண்டிருந்தாள் 
அவளின் கவிதையும் 
அப்படியொரு நாள் கிழி பட்டிருக்கலாம், 
எட்டிப் பார்த்த யன்னல்கள் 
காலம் கெட்டு விட்டதாகச் சொன்னது, 
எட்டு வயது தங்கைக்கு 
புரியாமல் இருக்கலாம்.... 
ஆனாலும் அழுது கொண்டிருந்தாள்... 
பெண்ணின் இலக்கணம் சற்றே புரிய, 
மானம் போனதாக 
அப்பாவின் விரல்கள் முதுகில் எழுதியது 
மாப்பிள்ளையைப் பாருங்கள் 
சனியனை முதலில் அனுப்புவோம் 
அண்ணா பொறுப்பாகப் பேசினான், 
கவிதையிலிருந்தவன் கற்பனையென்று 
விளங்க வைக்கும் நேரத்தில் 
இந்தச் சனியின் கழுத்தில் சங்கடன் கட்டிய தாலி 
கவிதையை முடித்திருக்கலாம்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts