
இரவைக் கிழித்த மின்னல்
உடனே இறந்துவிட்டது
வானம் அழுவது யாருக்காக?
நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவன்
அப்பாவிடம் கேட்டான்
நட்சத்திரங்களும் நம்மை எண்ணுமா?
நான்கு சுவருக்குள்
உட்கார்ந்திருக்கும் மௌனத்தை
ஒரு தும்மல் கலைத்து விடுகிறது,
படிக்காத புத்தகங்கள்
யாராவது ஒருவரின் வாசிப்பிற்காகவே
உயிரோடு வாழ்கிறது,
உணர்வில்லாத காதலை
உதறிவிட்டுப் போனவன் தேசாந்திரி
உறவுகள் காத்திருக்கின்றன,
காடுகளுக்குப் போனால் வன வாசம்
காடுகளே போனால்?
நகரத்தின் சுவாசங்கள்
மருத்துவ மனையில் நிற்கின்றன
ஆக்சிசனுக்குக் காசு வேண்டும்,
எழுத்துகள் இடம் மாறும் போது
சில நேரம் தீப்பற்றிக் கொள்கின்றன
பேனா புகைகிறது.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment