
உண்மையற்ற முகம்.
♪
என்னிடம் ஒரு பொய் முகத்தைத் தந்து
என்னை அணிந்து கொள்ளுமாறு
மிகக் கட்டாயமாக
என் முதுகில் ஏற்றி விடுகிறார்கள்
அவர்கள்.
சற்று பாரமாகவே அது எனக்கு இருக்கிறது
பொய் முகம் அவர்களுக்கு
பிடித்துப் போய்விட்டதாகவும்
அது இன்றைய உலக நாகரீகமென்றும்
அதீத அன்பின் காரணமாகவே
இந்த முகத்தை எனக்கும்
தருவதாக ஒப்பனை செய்கிறார்கள்.
எனினும்
தேநீர் கோப்பைக்குள் விழுந்த
ஈ ஒன்றாய்
என் மனச் சாட்சி
மரித்துவிட விரும்பாத
பொதுப் புரிதலில்
பொய் முகமொன்றை அணிந்து கொள்வதில்
எனக்கு உடன்பாடு இல்லையென்பதை
புனைவின் சாத்தியங்களை
எதிர் கொள்வதில்
எனக்கு மிகுந்த அனுபவமில்லையென
சொல்லி
அவர்களை வழியனுப்பி வைத்தேன்.
விரும்பினால்
அவர்களது முகத்தை அணிந்தபடி
என் வாசலுக்கு வந்து
சிறப்பிக்கும் படி வேண்டியவனாய்.
_ ஏ.நஸ்புள்ளாஹ்.
No comments:
Post a Comment