
வாசலில் நீரைத் தெளித்து
கோலம் போட்டவள்
தன் கற்பனைகளை
அதற்குள் விரித்து வைக்கிறாள்,
கணவனும் அதைத்தான்,
துணியில் விரித்து
காசாக்கி சோறு போடுகிறான்
சிந்திக் கிடந்த
வண்ணக் குழம்புகளையெடுத்து
ஓவியமொன்று சமைக்கிறாள்,
ஒளிந்திருந்த வான்கோவை
கிழித்தெறிந்து நக்கல் செய்கிறான் ,
ஓவியக் கூடத்தின்
வண்ணங்களை மிஞ்சிடும்,
சமையலறையின் சித்திரங்களை
அவள்தான் வடிவமைத்தாள்
அவளின் கனவுகள் வரையும்
ரகசிய சித்திரங்களை
தனது டைரிக் குறிப்புகளில்
பதுக்கி வைத்திருக்கிறாள்,
என்றாவது ஒரு நாள்
அதுவும் கூடக் களவு போகக் கூடும்
அவளைப் போலவே
அவள் கணவனின் பெயரோடு .
- மு.முகமது பாட்சா*
28/12/2016
No comments:
Post a Comment