Saturday, 16 December 2017

அந்தக் கதை

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஏழு கடல் தாண்டி 
எட்டாத மலையின் உயரத்தில் 
உட்கார்ந்திருக்கிறதாம் அந்தப் பச்சை தவளை, 
அந்தக் கதை அப்படித்தான் சொல்கிறது, 

வானத்தை வளைத்து விட்ட அரசு விமானம் 
வனங்களை வளைத்து போட்ட பிறகு 
கடலையும் கவளீகரிக்கப் புத்தியைத் தீட்டுகிறது,
அலைகள் நிற்காமல் வீசுகின்றன

பச்சை தவளையின் உடலில்தான் 
அரக்கனின் உயிர் ஒளிந்திருக்கிறதாம், 
இளவரசியை அவன் கடத்தி வைத்திருக்கிறான், 

நிவாரணம் கிடைக்காத மக்கள் போராடிக் கொண்டிருக்க ... 
அரச விருந்துகளில் 
தள்ளாடுகிறது நிவாரணக்கூட்டம்  நிர்வாணமாக ,

மீட்கச் சென்றவர்களின் பிணங்கள் வரிசையாய் வந்து விழ 
வேடனொருவன் துணிந்து போகிறான்.

மீட்புப் பணிகளின் தாமதத்தால் கடலொதுங்குகின்றன பிணங்கள், 
அரசு எந்திரத்தில் துர் நாற்றம், 

இளவரசியை மீட்டவன் அரக்கனைக் கொன்றுவிட்டான், 
ஊரே விழாக் கோலம்,

வேடன் என் கவுண்ட்டரில் இறந்து கிடக்க.... 
 இளவரசியைக் கடத்தியதே அவன்தானென்று
செய்திகள் வாசிக்கப் படுகின்றன, 

சுபமில்லாத அந்தக் கதை மீண்டும் தொடர்கிறது... 
மக்களுக்காக அரசன் அழுகிறானாம் 
செய்திகள் (க)தைக்கப் படுகின்றன, 

இப்போதும்  பச்சைத் தவளை  
பத்திரமாகவே மாளிகையில் இருக்கிறது , 
இளவரசிதான் சிறை வைக்கப் பட்டிருக்கிறாள்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts