
பறப்பதற்காக
சிறகுகளைக் கோதிக் கொண்டிருக்கிறேன்
உதிர்ந்த இறகுகள் சோகமாகப் பார்க்கின்றன,
என் நிழலில் நானே எப்படித் தங்குவது
பிறர் நிழலில்லாமல்
யாரும் நிஜமாகவே இருப்பதில்லை,
வார்த்தைகளுக்கு
வாசனைத் தைலம் தேய்க்கிறேன்
இல்லையென்றால்
அவை சாக்கடைகளில் சேர்ந்துவிடலாம்,
மௌனமென்பது
மரணத்தில் நிலவும் இறுதி மொழி,
மௌனிப்பவன்
ஏதோ ஒரு வகையில் மரணித்திருக்கிறான்,
இளமையைத் தொலைத்த பிறகும்
முதுமையில் தேடுகிறார்கள் இளமையை
வாழ்க்கை அங்கேயே நிற்கிறது,
நடப்பவனுக்கும் தரைதான் வானம்
பறவைகளும்
இங்குத்தானே உணவு உண்ணுகின்றன,
பாட்சாவின் கவிதைகள்
பறப்பதற்கா அல்லது புதைப்பதற்கா?
சிறகுகளைச் சற்றே உலர்த்திக் கொள்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment