
வறுமையின் நிறம் கருப்பு
எப்போதும்
எங்களுக்கான நிறத்தை
நீங்களே பூசுகிறீர்கள்
திட்டும்போது பச்சையாகவும்
வெட்டும்போது சிவப்பாகவும்...
எங்களுக்கான வடிவத்தை
நீங்களே வரைகிறீர்கள்
தர்மம் காக்குமென
தலையில் தலைப்பாகையும்
மானம் காக்குமென
இடுப்பில் கோவணத்தையும்...
எங்களுக்கான அடையாளத்தையும்
நீங்களே முடிவு செய்கிறீர்கள்
குப்பைத் தொட்டியையும்
குடிசை வீட்டையும்....
எங்களுக்கான வாழ்க்கையையும்
நீங்களே வாழ்கிறீர்கள்
எங்கள் சுதந்திரத்தில் நீங்களும்
உங்களுக்கு அடிமையாக நாங்களும்
இதுநாள்வரை
கருப்பு என்பதை கூட
கண்களில் மையாக
அலங்கரித்துக் கொண்டோம்
அழகு நிறமென..
ஆனால்
விரலில் பூசும்போதுதான்
விழித்துக் கொண்டோம்
அது வறுமையின் நிறமென...
கவிஞர் ஜின்னா ஆஸ்மி
No comments:
Post a Comment