
Thanks , painting: Marefumi komura - jappan artist
கடந்து போகும் கனவுகளைப் பிடித்து வந்து
தலையணையின் கீழ் மறைத்து வைக்கிறேன்,
இரவுகளை மட்டுமல்ல - அது
பகல்களையும் சாப்பிட்டு விடுகிறது,
அவாந்தரத்தில் நிற்கும் அந்திமப் பொழுது,
வெளிச்சமில்லா வெற்றிருட்டில் நடந்து போகிறது,
வேடிக்கை மனிதர்களும் அங்கில்லை,
விழிப்பது போல் ஜனனமும்
உறங்குதல் போல் மரணமும் வந்து விடுகிறது
படித்த பாடங்களை
தலைமுறைகள் புரட்டிப் படிக்கின்றன,
ஆளுக்கொரு சிரிப்பாய் அகன்றும் போகிறார்கள்,
பட்டாம் பூச்சிகளின் கனவுகளை
பாடம் செய்து வைக்கிறது
இலையுதிர் காலத்தின் மரங்கள்,
புழுக்களின் தவம் இலைகளில் கூடு கட்டும்
பூச்சிகளாய் பறக்கும் போது மட்டுமே
பூக்களின் வாசல்கள் திறக்கப் படுகின்றன.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment