
மொழிகளுக்குள் அகப்படாத
கவிதையொன்றைத் தேடிக் கொண்டிருந்தேன்
வார்த்தைகளுக்குள்
அடங்காத தன் பரந்த குடையை
அஃது எங்கு விரித்திருக்கும்?
மௌனமென்பதும்
ஒரு மொழியாகிவிட்டதாகக்
காற்றில் உதிர்ந்த சருகுகள் சொல்கின்றன,
பார்வைகளின் மொழியில்தான்
காதல் வளர்கிறது...
காகமொன்றிடம் அக் கவிதைப் பற்றிக் கேட்டேன்
அஃது ஒற்றுமையென்றது,
நேசம் கூட ஒரு மொழிதானென்று
புறாக்கள் சொன்னது,
உடல் மொழிதான்
மொழிகளின் ஆதார சுருதியென்று
ஊமையொருவன் சாடையில் சொல்கிறான்,
மொழி என்பதே சொல்வதுதானே!
சொல்லாத கவிதையை
நான் எங்குதான் தேடி பிடிப்பது?
காற்றிடம் கடைசியாகக் கேட்டுப் பார்த்தேன்
அது சிரித்துவிட்டு
அந்தக் கவிதை
கபர்குழியின் கடைசி வெப்பம் என்றது
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment