
நிறுத்தம் வந்ததும்
சிலர் இறங்கிக் கொண்டார்கள்
சிலர் ஏறிக் கொண்டார்கள்,
சன்னலோரக் காற்று
சற்றே இதமாய்த் தாலாட்டுகிறது,
இந்தச் சாலையும் மனிதர்களும்
எவ்வளவு வேகமாய் நகர்கிறார்கள்!
சம்பந்தமில்லாத பாடலொன்று
எப்போதும் பாடிக் கொண்டேயிருக்கிறது,
ஓட்டுநரின் கையில் உயிரைக்
கொடுத்துவிட்டு எத்துணைச் சந்தோசம்!
ஆளுக்கொரு முகமூடியுடன்தான்
அத்துணைப் பேரும் பயணிக்கிறார்கள்,
கடிகாரத்தின் முள்ளும்
வண்டியின் சக்கரங்களும்
ஒரே மாதிரிதான் சுழல்கின்றன...
நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டவர்
சற்று நேரம் வரை என்னிடம்
நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தார்,
சென்ற நிறுத்தத்தில் இறங்கிய குழந்தை
அத்துணையழகு... மனதை விட்டு
இன்னமும் இறங்கவில்லை,
தொங்கிக் கொண்டு வருபவனை
எச்சரிக்கிறார் நடத்துநர்,
"செத்துத் தொலையாதே! மேலே ஏறி வா!"
அடுத்த நிறுத்தத்தில் நானிறங்கும் முன்பாக
அத்துணைப் பேரையும்
ஆதங்கத்துடன் பார்த்துக் கொள்கிறேன்
கூடவே பயணித்தவர்களாயிற்றே!
என்னது? சரியா போச்சி!
நான் பேருந்தை பற்றிச் சொல்லவில்லை....
மறுபடியும் படியுங்கள்!
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment