இந்த அடர்நிசியில்
ஆழ்ந்துறங்கிப்போயிருக்கும்
யாரோக்களில்
ஒரு யாரோவால் தான்
நான் தனித்துவிடப்பட்டிருக்கிறேன்
அந்த யாரோவால் தான்
வெறுமனே ஒரு கவிதைப்புத்தகத்தை
புரட்டிக்கொண்டிருக்கிறேன்
அந்த யாரோவால் தான்
உணர்ச்சியற்ற பாடலொன்றை
இசைத்துக் கொண்டிருக்கிறேன்
அந்த யாரோவால் தான்
பாதி நிறமிழந்திருந்த
என் நகப்பூச்சின் மீதியையும்
அகற்றிக் கொண்டிருக்கிறேன்
அந்த யாரோவால் தான்
என் நாட்குறிப்பின் எஞ்சிய
ஏடுகளை
கிழித்தெடுக்கிறேன்
அந்த யாரோவால் தான்
என்னறையடைத்து
உட்தாழிட்டுக்கொள்கிறேன்
ஒளிகசியும் விளக்கை
உடைத்தெறிகிறேன்
இரவையே வெறித்து நோகிறேன்
என்னிருத்தலை ஒரு கடுஞ்சொல்லால்
சபித்து முடிக்கிறேன்
அந்த யாரோவால் தான்
அறுபட்ட
என் வலநாடி நரம்பு சொட்டும்
குருதி போல்
சிறுக சிறுக எனை ஒழுகி தீர்க்கிறேன்...
முகிழ் நிலா
No comments:
Post a Comment