
காலம்
சில மனிதர்களைத் தொலைத்துவிடுகிறது,
அவர்கள் எப்போதும்
படிக்கட்டுகளாகவே இருந்திருக்கிறார்கள்,
உயரத்திலேறி உட்கார்ந்து கொண்டவன்
ஏணியின் கால்களை மறந்து விடுகிறான் ,
அட்சரம் கற்றுக் கொடுத்த அ வின் கைகள்
யாருக்கும் நினைவிலில்லை,
தொலைந்து போன முகங்கள்
தொன்மைக்குள் உட்கார்ந்து கொண்டு
காலத்தை நகர்த்துவது யாருக்குத் தெரியும்?
கரம் கொடுத்த கைகள்
முகங்களை அடையாளம் காட்டுவதில்லை,
நான் என்ற சொல்
அவர்களுக்கு நஞ்சாகவே இருக்கிறது,
நிழலுக்கு ஒதுங்கியவன்
மரத்தை அங்கேயே விட்டுவிட்டுப் போகிறான்,
தன் வீட்டிற்கு முத்தம் கொடுத்த மனிதர்கள்
எத்துணைப் பேர்?
செருப்புகளைக் கேவலமாகப் பார்க்கும் சமூகத்தில்
காலம்
சிலர் மனிதர்களைத் தொலைத்து விடுகிறது
அவர்கள் எப்போதும்
படிக்கட்டுகளாகவே இருந்திருக்கிறார்கள்.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment