Friday, 8 December 2017

விடை கொடுங்கள் துரோகிகளே

 படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

கண்களை மூடி 
காலாட்டாமல் இருந்த வேளையில்தான் 
களவாடிச் சென்றுவிட்டார்கள், 
என் உயிரை ! 

சில நேரங்களில்,சிறுத் தூக்கம், 
பெருந் துக்கங்களாக மாறிவிடுகின்றன . 
உறக்கங்களோடு உறவாடும் போதும் 
உறவுகளை, 
அருகினில் வைத்துக் கொள்ளக் கூடாது ! 

சேர்த்து வைத்த திரவியங்கள் கூட 
தீராத வியாதிகள்தான். 
ஆசை மாளிகைகளை, களவாடிச் செல்ல 
அருகினில் இருப்பவர்கள்தான், 
அதிகம் ஆசைப் படுகிறார்கள் ! 

ஆட்சிக் கட்டிலும், அரசப் பதவிகளும், 
குழிகளில்தான் புதைக்கப் படுகின்றன . 
ஆசைகள் மட்டும் அடுத்தவரிடம், 
இடம் பெயர்ந்து ஆட்சி செய்கின்றது ! 

முட்டாள்களாக முன் வந்து நின்றவர்கள், 
அதிகாரத்தின் கைகளாக 
எளிதில் இடம் மாறி விடுகிறார்கள் ! 

அந்தோ, தூரத்தில் புலம்பி நிற்பவர்கள், 
என்னைப் பார்த்து 
தூரத்தில் நின்று கையசைத்தவர்கள் ! 

அந்தோ, தூரத்தில் கலங்கி அழுபவர்கள், 
என்னை அரியணையில் 
தூக்கி வைத்து அழகு பார்த்தவர்கள் ! 

அவர்களின் கண்ணீர்த் துளிகளின், 
விடை தெரியாத கேள்விகளின் முதுகில்தான் 
என், பெருந் தூக்கம் பயணிக்கிறது ! 

விடை கொடுங்கள் துரோகிகளே ! 

- மு.முகமது பாட்சா 08/12/2016

No comments:

Post a Comment

Popular Posts