Friday, 15 December 2017

கனமான கவிதை




நகர்த்த முடியாத அந்தக் கவிதையை 
நகர்த்திக் கொண்டிருந்தார்கள், 

அறிவு ஜீவியொருவன் எழுதியதாக 
அதன் கீழ், அச்சிடப்பட்டிருந்தது ! 

வார்த்தைகளின் கனத்தைவிட 
ஜாலத்தின் எடைகள் கூடியிருந்தன, 

தள்ளிக் கொண்டிருந்தவர்களும், 
ஒன்றிரண்டு வார்த்தைகளை 
திருடிக் கொண்டிருந்தார்கள் ! 

எட்டிப் பார்த்த சிலர், 
அதில் விழுந்து 
இறந்துவிட்டதாகச் சொன்னார்கள் ! 

எழுதினவன், அதன் எழுத்துகளில்
உட்கார்ந்திருப்பதாகச் சொல்லப்பட்டது ! 

இத்தினை கனமான கவிதையை 
நானும் பார்த்ததில்லையென்றே 
நம்பத் தொடங்கினேன்... 

அந்தப் பக்கமாய், எட்டிப் பார்த்த 'ஈ'யொன்று 
எட்டி உதைத்துவிட்டுப் போனது, 
அந்தக் கவிதையை ! 

பொருளேயில்லாத கவிதையை 
புரட்டிக் கொண்டிருக்கும் இவர்கள், 
புத்திசாலிகளாக இருக்க 
வாய்ப்பே யில்லையென்று 
சொல்லிவிட்டுச் சிரித்தது ! 

முட்டாள்களின் வரிசையில் 
நானும்தான் உட்கார்ந்திருக்கிறேன், 
சிந்தித்துத் தொலைத்த தவற்றுக்காக ! 

- மு.முகமதுபாட்சா* 15/12/2016

No comments:

Post a Comment

Popular Posts