Saturday, 9 December 2017

இதுதான்



மூளையின் நரம்புகளில் 
உட்கார்ந்திருக்கிறது 
இதுதான் என்பது மிக அழுத்தமாக, 
கை மீறிய வார்த்தைகள் 
காட்டு மிராண்டிகளின் மொழியின் கீழ் 
அழுந்தியிருப்பதாக அது சொல்கிறது, 
சரியான பதில்களை எங்குத் தேடுவது? 
தேடினாலும் கிடைக்காது விடையங்கள், 
நிலங்களை நிராகரித்த வனங்களும் 
பறவைகளை நிராகரித்த வானமும் 
சயனைடுக் குப்பிகளை 
விழுங்கிக் கொண்டிருக்கின்றன, 
நீர் நிலைகளை வெறுத்த மீன்கள் 
கரைகளில் வாழ முயன்று 
கடைத்தேறாது அழுகிக் கிடக்கின்றன, 
கடைசிச் சொட்டுத் தண்ணீர் 
வில்லைகளாகக் கிடைக்கும் போதும் 
விழித்துக் கொள்ளாதவன் 
முட்டாள் குதிரையில் பயணிக்கும் 
முழு மூடக் கற்பனையில் 
சிறகுகளும் வானமும் அவனுக்கு 
இலவசமாகக் கிடைக்கின்றன... 
வாங்குவதற்கு வரிசையில் நிற்கிறான்... 
அரிசியில் நெளியும் புழுக்கள் 
அற்பமாகப் பார்க்கின்றன... 
எட்டாத கதைகளில் விழுந்து 
கொட்டாவி விட்டவனின் மூளை நரம்புகளில் 
உட்கார்ந்திருக்கிறது 
இதுதான் என்பது மிக அழுத்தமாக 

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts