
கட்டாந்தரையில்
படகுகளை ஓட்டிக் கொண்டு
வாழ்க்கையை நகர்த்துகிறோம் !
நீரில்லாத இடத்தில்தான்,
நீச்சலடிக்க முடியாமல்
மூழ்குகிறோம் !
காற்றும் மழையும்,
எங்களை நகர்த்திக் கொண்டு
எங்கோ செல்கிறது !
உயர்ந்த மாளிகைகள்,
உப்புக் கரித்த எச்சிலை,
எங்கள் மீதுதான் துப்புகின்றது !
நகரத்தின் நாற்றங்களென்று
எங்களுக்குப் பெயர் வைத்தவர்களே...
உங்களின் நாற்றங்களை,
நாங்கள்தானே
சுத்தம் செய்கிறோம் !
காற்றின் பெரும் மூச்சில்
விழுந்த மரங்களையும் கூட
நாங்கள்தானே..
நகர்த்தி வைக்கிறோம் !
கழிவு நீரில் கால்வைக்கவும்
கூசும் உங்களுக்கு,
எங்களின்
கைகளை விரித்து வைத்துத்தானே
காரில் ஏற்றுகிறோம் !
கூவக்கரை வீடுகளை
அப்புறப் படுத்துங்கள் என்பதுதான்
உங்களின் பிரதான கோரிக்கை...!
நல்ல நதியை
நாற்றமடிக்க வைத்தவர்களே,
நீங்கள்தான் என்பது
உங்களுக்கே தெரியவில்லை !
உங்கள் நாற்றத்தில்தானே..
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் !
மறந்து விடாதீர்கள்...
எங்களின் சுவாசத்தை
இரவல் வாங்கிக் கொண்டுதான்
நீங்களே , இன்று
சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் !
- மு.முகமது பாட்சா*
13/12/2016
No comments:
Post a Comment