
விண்ணப்பம்
மரணமே நீ யார்
எங்கிருந்து வருகிறாய்
எங்கென்னை எடுத்துச் செல்வாய்
வழி தூரமோ
கடும் இருட்டோ
துணிவுள்ளவளாய் கோரிக்கொள்வேன்
ஆயினும் அச்சமுறுகிறேன்
மரணத்திற்கு அப்பால்
எதுவென அறியாததால்
மரணமே
சில வேளைகளில்
உன்னை எதிர்பார்க்கிறேன்
சில நேரங்களில்
வரக்கூடாதென விழைகிறேன்
நிச்சயமாய் என்னை எடுக்கத்தான் வேண்டுமெனில்
எடுத்துச் செல்வாயானால்
என்மீது இரங்குவாய்
எவராலும் காயப்படுத்தாத
துன்பப்படுத்தாத
இடத்திற்கு எடுத்துச் செல்
ஒரு விண்ணப்பம்
அன்பாயிரு
குழந்தைப் பருவத்தில் தூங்கியதுபோல்
என்னைத் தூங்கவிடு
………………..
இவ்வுலகு தூங்குகையில்
அநேக இரவுகள் விழித்திருக்கிறேன்
அழாமலிருக்கவும் முயல்கிறேன்
கருணையாயிரும் ஆண்டவரே
என்மேல் கருணையாயிரும்
காயம்பட்ட இதயத்தைக்
குணமாக்கியருளும் இறைவா
இத்துயரை நானடைய
என்ன தவறு நான் செய்தேன்?
எங்கே ஓ! எங்கே
அந்த மகிழ்வான நாட்கள் போயின
எங்கே எங்கே ஏன் இறைவா
இனிய மகிழ்வின் நண்பர் போனபின்
தபால்காரன் கொண்டுவரும்
‘உற்சாகமாக இரு’
‘விரைவில் குணமடை’
இது விநோதமானது
ஆம் இது மிக விநோதமானது
ஆயினும்
‘அன்பின் இச்சிறு குறிப்புகளின்’
உற்சாகம்
நலிவுற்ற இதயத்தின் துடிப்பை
நீடிக்க உதவுகிறதது.
கவிதை: கீதாஞ்சலி
நன்றி - தாய்வீடு (கனடா)
குறிப்பு: இவர் உ,பி யில் 1961 - 1977 இடைப்பட்ட 17 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த பெண்கவி !
இளம் வயதிலேயே கேன்சரால் பாதிக்கப் பட்ட இந்த கவிதாயினி, தன் வலிகளை மறைக்க, கவிதைகளோடு, கடவுளோடு உரையாடியவள் !
இவர், இறந்த பிறகே இவரது தலையனைக் கவிதைகள் நூலாக வடிவம் பெற்றது.
தகவல்:மு.புஷ்பராஜன்(பெண்ணியம்- இணையவெளி)
No comments:
Post a Comment