
வெண்மணியின் நெருப்பின் புகை
இன்னமும் மிச்சமிருக்கிறது...
ஆதிக்கத்தின் கால்கள்
எப்போதும் நீண்டே இருக்கின்றன,
புகைந்தெரியும் நெருப்புகளில்
எதுதான் சாதித் தீ?
யோனிகளில் நுழைந்த உறுப்புகளுக்கு
அவையேன் தெரியாமல் போனது,
காமத்தின் மிச்சங்களின் எச்சில்கள்
மிகைக் கிரீடம் சூடிக் கொண்டால்
மன்னனென மாறி விடுமா?
நீதியென்பது அதிகாரத்தின் முன்பு
எப்போதும்
தலை குனிந்தே நிற்கிறது
மனிதம் பேசாத சாதிகளல்லவோ
மிகவும் மட்டமானவை
முத்தங்களையெல்லாம்
விஷமாக்கி வைத்து விட்டு
மோகிப்பதில் என்ன பயன்?
சாட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு
சாப்பாடு போடுவதால் பசியாறிவிடாது,
நீங்கள்
இப்போதும் கொளுத்துவது நெருப்புகளைத்தான்
அது கொளுத்தியவனையும்
தீண்டாமல் விடவே விடாது...
அதிகாரமென்பதே நாய்களின் குரைப்பு....
அடங்காமை மௌனத்தின் வெடிப்பு...
வெண்மணி நெருப்பின் புகை
இன்னமும் கனன்று கொண்டுதானிருக்கிறது
சாம்பல்களெழுந்து
பெரும் தீயினை மூட்டுவதற்கு.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment