பெருமதிப்பிற்குரிய

பெருமதிப்பிற்குரிய நண்பா
உனக்கு கெட்ட வார்த்தைகள் தெரியும்
எனக்கும் கெட்ட வார்த்தைகள் தெரியும்
ஆனால் முதன்முதலாக
நீதான் எனது இனத்தைப்பற்றி தரக்குறைவாக பேசினாய்
அதற்கு பதில் நான் உனது இனத்தை பேசினேன்
நாம் இனவாதிகள் ஆகினோம்
நான் இனவாதி இல்லை
உன்னால் உருவாக்கப்பட்டேன்
பெருமதிப்பிற்குரிய சகோதரா
உனக்கு கேடுகெட்ட வார்த்தைகள் தெரியும்
எனக்கும் கேடுகெட்ட வார்த்தைகள் தெரியும்
ஆனால் முதன்முதலாக
நீதான் எனது மதத்தைப்பற்றி தரக்குறைவாக பேசினாய்
அதற்கு பதில் நான் உனது மதத்தை பேசினேன்
நாம் மதவாதிகள் ஆகினோம்
நான் மதவாதி இல்லை
உன்னால் உருவாக்கப்பட்டேன்
பெருமதிப்பிற்குரிய மானிடா
உனக்கு மிகக்கேடுகெட்ட வார்த்தைகள் தெரியும்
எனக்கும் மிகக்கேடுகெட்ட வார்த்தைகள் தெரியும்
ஆனால் முதன்முதலாக
நீதான் எனது மொழியைப்பற்றி தரக்குறைவாக பேசினாய்
அதற்கு பதில் நான் உனது மொழியை பேசினேன்
நாம் மொழிவாதிகள் ஆகினோம்
நான் மொழிவாதி இல்லை
உன்னால் உருவாக்கப்பட்டேன்
ஒரு மனநிலைப் பிறழ்ந்தவனை
நாம் பலவருடங்களாக
கவனித்து வருகிறோம்
அவன் காலையில்
கோவில் வாசலில் அம்மா தாயே என்று அழைக்கிறான்
பிற்பகல் பள்ளிவாசலில் பாயம்மா என்கிறான்
மாலை புனித அந்தோனியார் வாசலில் சிஸ்டர் என்கிறான்
அவன் தனது இயல்பை குலைத்ததே இல்லை
அவன் மனநிலைப் பிறழ்ந்தவனே இல்லை
அதிரகசிய மனநிலை பிறழ்ந்தவன்
வேறு எங்கோ இருக்கிறான்
உலகின் உயர்ந்த ஆடைகளை அணிந்து
தனது முகம் தெரியாத அளவிற்கு
சிகார் புகைத்துக்கொண்டு
குட்டிக்குட்டியான சதுரங்க கட்டங்களில்
ராஜாவை மந்திரியை சேனைகளை
வெட்டுவது போலவே
உண்மையான அரசியலை
விரல்சொடுக்கில் நகர்த்திக்கொண்டிருக்கிறான்
சோதரா
நாம் பகடைக்காய்களாக உருமாறி
வெகுகாலமாகிவிட்டது .
-பாலைவன லாந்தர்-
No comments:
Post a Comment