
தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கிறோம்,
தேசியக் கொடியும்
எங்களின் சட்டைகளில்,
பெரும்பாலும் திருடர்கள்தான்
கொடிகளை ஏற்றுகிறார்கள்,
நரம்புகளில் நகரும் நாக்குப் பூச்சிகளை
மறைத்துக் கொள்கிறோம் ,
இராணுவ உடையணியாத
சிப்பாய்களாம் நாங்கள்,
தேசத்தின் நலனைக் காக்க
எங்களின் முதுகுகளை
வளைக்கச் சொல்லுகிறார்கள்,
முதுகில் ஏறி நிற்கும் அம்பானிகளை
யார்தான் இறக்கிவிடுவது ?
எங்களின் வீட்டிலெரியும்
ஒற்றை விளக்குகள் எரியத்தான்
அணு உலைகளையும், நாங்கள்
அனுமதிக்கிறோம் !
எங்களின் இரணமெல்லாம் ஆறிவிடுமாம்
புண்களுக்கு மருந்தாக
பொட்டாசியம் குளொரட் தரப் படுகிறது ,
பணமில்லா பரிவர்த்தனைக்கு
மாறச் சொல்லுகிறார்கள்,
பணமே இல்லாமல்தானே
இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் !
கொத்தடிமைகள் கூட
பணமில்லா பரிவர்த்தனையில் வாழ்வதாகத்தான்
வரலாற்று நிகழ்வுகள் சொல்லுகின்றன ,
வாருங்கள்,
திரையரங்கின் தேசிய கீதத்திற்கு
எழுந்து நிற்போம்
இராணுவத்தின் சிப்பாய்களாய்
ஒற்றுமையாக!
-மு.முகமது பாட்சா 15/12/2016
No comments:
Post a Comment