Sunday, 17 December 2017

அறிவு ஜீவிகளின் கோழி

தானியங்கு மாற்று உரை இல்லை.

அறிவு ஜீவிகளின் மத்தியில் வந்து 
அமர்ந்து கொண்டது 
பெட்டைக் கோழியொன்று ! 

நாட்டுக் கோழியென்பது சரியா? 
அல்லது 
வீட்டுக் கோழியென்பது சரியா? 
என்று ஆராய்ச்சி திரும்பியது ! 

நாட்டிற்குள் 
நகரமும் அடக்கமாகும், 
காட்டுக் கோழியென்பதுதான் 
சரியாக இருக்குமென்று 
வாதம் முன்னெடுக்கப் பட்டது ! 

வீட்டிற்குள் வளர்வதால், 
வீட்டுக் கோழிதான் சரியென்று 
மெச்சும் அறிவாளியொருவர், 
நச்சென்று சொன்னார் ! 

எந்தக் கோழியாக இருந்தாலும், 
இறைச்சிக்குத்தான் உதவுமென்பதால் 
கறிக்கோழியென்பதுதான் 
சிறந்த வார்த்தையென்று 
புதிய அறிவாளியால் 
பொருள் விரித்து வைக்கப் பட்டது ! 

திடீரென்று சிரிப்பை விதைத்த 
ஓர் அறிவின் ஜீவி, 
முட்டைக் கோழிக்காகவா 
இத்தினை நீண்ட விளக்கமென்றார் ! 

ஆய்வைத் தொடங்கியவருக்கோ, 
அத்தினைக் கடுப்பு... 
முதலில் கோழியென்பதே, 
"தமிழா? அல்லது தேவ நாகரியா?" 
விளக்கம் சொல்லுங்களென்றார் ! 

இப்போதுதான், புதுக் குழப்பம் 
இறக்கைகளைக் கட்டிக் கொண்டு 
வந்தமர்ந்தது ! 

இறகுகளையெடுத்து, அவர்கள் 
தலைகளை 
சொறிந்து கொண்ட வேளையில்தான் 
பெட்டைக் கோழி 
அங்கிருந்து பறந்து போனது ! 


- மு.முகமது பாட்சா*
17/12/2016

No comments:

Post a Comment

Popular Posts