
விரல்களின் ரேகை வழியே
ஏதாவதொரு சப்தம்
ஓடிக் கொண்டேயிருக்கிறது,
மின்னூட்டம் வழியே அவற்றை
கணினிக்குக் கடத்துகிறேன்,
காற்றாய் வரும் எழுத்துகள்
குதிரைகளையும் பறவைகளையும்
இழுத்து வருகின்றன...
கடலாய் விரியும் வார்த்தைகள்
என்னை உள் வாங்கிக் கொள்ள,
நீச்சல் தெரியாதவன் நீந்துவதற்கு
தேவதைகள் கூடவே வருகிறார்கள்,
காலை பிடித்திழுக்கின்றன
வஞ்சக வார்த்தைகள்
மணலுக்குள்
ஆழப் புதையும் கவிதைகளை
ராஜாளியின் இறகுகள்
ஏந்திக் கொள்கின்றன,
மீட்பின் வெளிச்சம் கண்களைக் கூச
பறவைகளின் பார்வை ரேகைகள்
ஒரு சில வார்த்தைகளை
கற்றுத் தருகின்றன...
அதிலொன்று
'பார்வைகளிலோடும் சப்தங்களையும்
பத்திரமாக்கப் பழகிக்கொள்'.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment