Sunday, 17 December 2017

கலியப்தம்


painting : Jean-Michel Basquiat



நீர்க் குமிழியின் மேல் உட்கார்ந்திருக்கும் வானம் 
இன்னம் சற்று நேரத்தில் உடைந்து சிதறலாம், 
ஒரு பிரபஞ்சத்தின் பெரும் வெடிப்பின் தியரி 
அதிர்வுகளின் கோள்களாக உருண்டோடுகின்றன, 
நீரோடும் பாதையிலோடும் நீர் பாம்பிற்குச் 
சாத்தானின் கதைகள் தெரியாது, 
தவளைகளின் சப்த அதிர்வுகளை 
உடலால் உள் வாங்கிக் கொள்கிறது, 
பசித் தீர்ந்ததும் சேமிப்புத் தேவைப் படாது, 
பறவைகளின் வானம் நிர்மதியானது , 
இரைகளின் பார்வையைப் பூமியில் பதிக்கிறது, 
வேர்களின் பாதைகள் 
விருட்சங்களை இன்னமும் வைத்திருக்கின்றன, 
அடுத்தொரு யுகத்தின் புதிய வித்துகளாக 
அவை இருக்கக் கூடும், 
வேர்கள்தான் பூமிப் பந்தை 
சிதையாமல் கட்டி வைத்திருக்கிறதா? 
விலங்குகளின் பாதையில் மனிதர்களுக்கு இடமில்லை, 
அறிவியலென்பது இயலை அறிந்து கொள்வது மட்டும்... 
சிதைப்பதென்பது அஞ்ஞானம், 
விஞ்சும் ஞானம் இயற்கையின் பேரிடர், 
ஆரிகாமி பறவைகளும் விலங்குகளும் 
பார்வைக்கு மட்டுமே அழகு, 
மனிதர்களின் எலும்புக் கூடுகளும் 
காட்சிப் பொருட்களாகவே மாறக் கூடும், 
பார்வையாளர்களே இல்லாத நிர்மூல மயானத்தில்.

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts