Monday, 23 October 2017

நான் இரசித்த கவிதைகள் - 83


ஏதேன் சீதனம் 

'வாழ்க்கை'ப்பட்டு வந்த.. 
எல்லோருக்கும் போலத்தான் 
எனக்கும் வழங்கப்பட்டது 
ஏதேன் சீதனம். 

கதறியழுதவர் தம்மின் 
கண்ணீரினூடே தெரிந்தன 
இருப்பின் நியாயமும்.. 
இறப்பின் அநியாயமும். 

என்றாலும்... 
இம்'மை' அநியாயம் 
மறு'மை' க்கு நியாயமோ..? 

இமைக்க மறந்த ஒரு கணத்தில் 
இன்னொரு(வர்) தோளுக்கு 
இறங்கிப்போயிருந்தன 
சுமைகளும்; சொந்தங்களும் 
சொல்லிக்கொள்ளாமலேயே.. 

ஆள் மாற்றி, தோள் மாற்றி 
அனுப்பி வைத்தனர் 
'நிலையத்'துக்கு. 

எண்ணங்கள்; 
எண்ணத்தால் விளைந்த செயல்களன்றி 
எதுவுமே சுமந்துக்கொள்ளாமல் 
சமாதி வழிப்பயணம். 

வழியனுப்ப வந்தவர்களில் 
கனவுக்குமரிகளைத்தான் காணோம் 
அடைந்து விட்டவை 
சாதனைத்திருமதிகளாய்.. 
அடையாதவைகளோ 
ஏக்கக் கன்னிகளாய்.. 

குடும்பங்கள்-பொறுப்புக்கள் 
கூட்டாளிகள்-தொழில்கள் 
கடமைகள் உடமைகள் எல்லாமே 
கழற்றி விடப்பட்டிருந்த 
கால் செருப்புக்களோடு! 

தன் தேகக்கூடு தவிர 
தெரிந்துவைத்திராத ஆன்மா 
நன்மை தீமைகளின் 
நீதிநிலை அறிக்கையை 
வழியெங்கிலும் 
யோசித்தப்படி.. 

ஒரு 'நான்' மறைந்துப் போயிருக்க.. 
வெற்றிடம் 'உண்டாகி'யிருந்தது 
நாளை நிரப்பப்படுமோ?....! 

இப்னு ஹம்துன்

1 comment:

  1. என்னுடைய இக்கவிதையை வெளியிட்டமைக்கு நன்றி

    ReplyDelete

Popular Posts