Tuesday, 26 September 2017

நான் இரசித்த கவிதைகள் - 65


தண்ணீர்



வெய்யிலின் வாய் உன்னை
விழுங்கி விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்தேன்
மழையாக நீ
மண்ணுக்குத் திரும்பும் வரை!

கடலுக்குள் ஆறாய்க் கலந்து நீ
களங்கப்பட்டு விட்டதாகக்
கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்
ஓரக் கரையில் நீ
ஊற்றாகச் சுரக்கும் வரை!

இறங்கிவர மட்டுமே
உனக்குத் தெரியும் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன்
ஆவியாக நீ
ஆகாயத்தில் ஏறும் வரை!

உயிர்களை உண்டாக்கும்
உன்னதப் பொரளாகவே
உன்னைப் பாடிக் கொண்டிருந்தேன் -
மூழ்கிச் செத்தவர்களை நீ
முதுகில் சுமந்து காட்டும் வரை!

தண்ணீரே..
புற அழுக்கை மட்டுமே உன்னால்
போக்க முடியும் என்றிருந்தேன் -
என் சோக அழுக்கை
நீ கண்ணீராக வந்து
சுத்தம் செய்யும் வரை!

கவிஞர் க.து.மு.இக்பால்

சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் 
இவருக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் மிக உயரிய கலாசார விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருது, தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது, மோண்ட் பிளாங் இலக்கிய விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts