
வானத்தில் நானொரு
நட்சத்திரமாக இருக்கலாம் ,
ஒற்றைப் புள்ளியாய்
வெளிச்சம் சிந்துவதில்
எனக்கொன்றும் பெருமையில்லை !
தூண்டில் மீன்களின் கவனத்தைக் கூட
கடல் மீன்கள் பெறுவதில்லை !
உடைந்த பானையின் இரக்கம்
ஒரு நொடி வருத்தமாய்
மறைந்து போகிறது !
காட்டாற்று வெள்ளம்
கணக்கில் வைத்துக் கொள்வதில்லை
அடித்துச் செல்லும்
அத்தனை பொருட்களையும் !
வெளிச்சமென்பதும்
ஒரு வகை மாயைதான்,
கனவுகளுக்குள் யார்
விளக்குகளை வைத்தது ?
நிலவாக இருக்க வேண்டாம்,
நான்
நானாகவாவது தெரியவேண்டும்
இல்லையென்றால்
நான் நானாகவே இருக்க முடியாது !
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment