
ஆலயத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான்
கதவுகள் திறந்தே கிடக்கின்றன
வெடித்த பாதைகளின் வெந்நீர் ஊற்றுகள் பீய்ச்சியடிக்க,
கால்களில் தைத்த சப்பாத்திக் கள்ளிகள்
பாதைகளின் வாசத்தைப் பெயர்த்தெடுத்து வருகின்றன
நிழல் விரித்த நகங்களில் பிஞ்சிய சதைத் துண்டங்கள்
கால்களைத் துடைத்துக் கொள்கிறான்
அழுகியப் பிண முடை நாற்றம் எங்கிருந்தோ வீசுகிறது
கருவறைக்குள் நுழைந்துவிடும் முயற்சியாய்
கைகளை உயர்த்துகிறான்
அவன் தாயின் கருவறையும்
சற்றே நெளிந்து மண்ணறையில் மீண்டும் புதைகிறது...
மூப்பின் முகவரியில்
வாசனை வார்த்தைகளை எப்படி நுகர்வது?
நெளிந்தோடும் சிறு நீர்த்தாரையில் நனைந்த தேகத்தை
அசைக்க வலுவற்றழுகிறது உள்கிடங்கு...
ஆலயத்தில் உட்கார்ந்து
அவன் அழுது கொண்டுதானிருக்கிறான்
கண்ணீரைத் துடைக்க மட்டும் யாரும் வரவில்லை,
கதவுகளை மூடுகிறார்கள்....
இவன் நிம்மதியாக இனி தூங்குவானென்று
யார் யாரோ சொல்லிவிட்டு நகர்கிறார்கள்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment