
கடற்கரையில் கால் நனைத்துக் கொண்டு நிற்கிறேன்,
அன்று நீயும் என்னோடு கை கோர்த்துக் கொண்டு நின்றாய்,
நின்றவிடத்தில் நிழலாயோடிய நண்டுகளை,
நாமிருவரும்தான் பிடிக்க முயன்று தோற்றுப் போனோம்,
உன்னிடம் தோற்றுப் போவதில்
எனக்கு மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டிருந்த நேரம்,
சில நேரங்களில் நாமிருவரும்
நூலகங்களுக்குள் நுழைந்து நூல்களாகிவிடுவோம்,
நம்மைப் பல பார்வைகள் படித்துக் கொண்டிருக்கும்,
படித்துக் கொண்டிருந்த கவிதையொன்றை நீயெனக்குக் காட்டினாய்,
உனக்கு மிதவாத கவிதைகள் மிகவும் விருப்பமானது,
என் விருப்பங்களை நீயென்றுமே பட்டியலிட்டதில்லை,
பட்டியல் முழுவதும் நீ, நீ, நீயேதான்,
நான் நீ எழுதித் தரும் வெள்ளைத் தாளாக மட்டுமே இருந்தேன்,
பேனாவாக இருந்திருந்தால் கூட
உன் கைப்பையில் இடம் பிடித்திருப்பேன்,
தாளென்பதால் தேவை முடிந்து கசக்கி எறிந்தாய்,
நான் விழுந்தவிடத்தில் சாரல் தூறிக் கொண்டிருந்தது,
உன் தூரம் தொலைந்த பிறகும் கசங்கித்தான் கிடந்தேன்,
கிடந்தவென்னை ஸ்பரிசித்தவளின் விரல்களில்
பூக்கள் பூத்தெழுந்தன,
முத்தத்தால் முகம் நீவி விட்டவள்,
சுருட்டி பேனாவாக்கி கவிதைகளெழுதினாள்,
எழுத்துகளாலென்னை நிமிர்த்தியவள்,
நெஞ்சனைக்குள் பஞ்சணையைத் தந்தாள்,
நான்
கடற்கரையில் கால் நனைத்துக் கொண்டு நிற்கிறேன்,
அவளென் கையைப் பிடித்துக் கொண்டு ரசிக்கிறாள்...
ஆமாம், நீ இப்போது எப்படி இருக்கிறாய்?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment