
தேநீரின் குவளைக்குள்தான்
விழுந்து கிடக்கிறேன்...
அதன் ருசி
என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது,
நாசித்துவாரங்களில் ஊடுருவிய மணம்
மூளை நரம்புகளுக்குள் உட்கார்ந்து
மந்திரமோதுகிறது....
பிரச்சனைகள்
அதனளவில் மெல்லக் கழல்கின்றன,
சுற்றி நகரும் அதனாவியில்
சுற்றிச் சுற்றி சுழல்கிறேன்
கடந்த காலங்கள் கடந்து நகர
எதிர்காலங்களோ
நிரப்பாத வெற்றிடமாய் இருக்கின்றன
நிகழ்காலத்தில் நான் மட்டுமே நிற்கிறேன்...
முப்பருவங்கள் ஒவ்வொன்றும்
மற்றொரு பருவத்தில் உட்கார்ந்து கொள்வதில்லை,
மழைத் தராத மேகத்திற்காக
வசந்தக் காற்றை நானெதற்கு வீசவேண்டும்?
இரசனைக்குள் உட்கார்ந்திருக்கிறது வாழ்க்கை
கற்றுக் கொடுக்கிறது ஒரு குவளைத் தேநீர்...
ஒரு துளி மிடறும் சிறு துளி இரசனையும் போதும்
வாழ்க்கையை
இனிதாக வாழ்ந்து விடுவதற்கு.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment