
அரவமொன்று ஆழ்ந்து விழுங்கும்
கத்தும் தத்துவானின் உயிர்
சற்றில் பிரியும் வேளையில்
உற்றம் உறவுகள் சுற்றி நின்று கத்துமா?
தெரியவில்லை !
அகவும் மயிலினோசைக் கேட்டு
அழகிய தோகை விரிப்பில் லயிக்க
மேகங்களுக்கென்ன வேலையாயில்லை !
கனவுகளைக் கூட்டிப் பெருக்கி
வீசிவிட்டுப் போகிறானொருவன்,
நிஜத்தை தேடுவதும் நிதர்சனம்தான் !
அடுத்தவனின் பசிக்காக
அழும் மனதுக்காரனும்
தன் பசிக்காக
சாப்பிடாமல் இருப்பதில்லை !
சுற்றிலும் பிழைகள்
சூழ்ந்து நிற்கும் நேரத்தில்
விடையம் தெரியாத விடைகளும்
குழப்பத்தின் குழம்புகள்தான்!
ஆசை வெறுத்தவன்
சாப்பிடாமல் வாழவில்லை,
புத்தனுக்கும் சீரணிக்காத உணவுதான்
சாவிற்குக் காரணமாம் !
எதையோ சொல்லவந்து
எங்கேயோ போகிறது இந்தக் கவிதை ,
இதன் பசி யாருக்குத் தெரியும் ?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment