விளக்குகளை
அணைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறோம்,
கால்களின் நடுவே ஊடுருவும்
பாம்புகளும் பல்லிகளும் கூட
எங்களைப்
பத்திரமாகப் பார்த்துக் கொள்கின்றன,
பயத்தில் சிலர்
ஜெப மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்க,
பிரளயங்களெதுவுதும்
அதிசயமாக நிகழ்ந்துவிடவில்லை,
வெளியே துப்பாக்கிகளின் ஓசைகளோடு
இராஜ விக்கிரகங்கள்
ஜாக்கிரதையாகவே இருக்கின்றன,
மனிதம் கொன்று மனிதம் வாழ்வதாக
மரணச் சாத்திரங்கள்
மகிழம் பூக்களை வீசிக் கொண்டிருக்க,
தும்மல் போடுமொருவன்
அது கவிதையாக இருக்கக் கூடாதென
வேண்டிக் கொள்கிறான்,
காற்றொன்றறைந்து
கதவுகள் உடைந்த போது ,
அங்கே யாருமே இருக்கவில்லை,
.வெளிச்சம்
எங்களை வெளியில் கொண்டு வருகிறது...
கைகளை மெல்ல உயர்த்துகிறோம்...
சோம்பல் முறிப்பதற்காக,
தோட்டாக்களின் குண்டுகள் ,
இப்போது எங்களைச்
சுற்றிச் சுற்றியே வந்து கொண்டிருக்க...
கொஞ்சம் பேர் இறந்து
கொஞ்சம் பேர்
தேசத்தை வாழ்விக்கிறோம்.
வந்தே மாதராம் பாடுங்கள்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment