Tuesday, 5 September 2017

மூச்சு விட்டு விடாதீர்கள்

fear social activity Morden painting க்கான பட முடிவு

தூங்கியெழுந்தபோது 
எல்லாம் முடிந்து போயிருந்தது, 

மாணவியின் சடலத்தைக் கிடத்தி 
அழுது கொண்டிருந்தார்கள், 

அவளின் கனவு மட்டும் 
கயிற்றை மிச்சம் வைத்திருந்தது, 

கடவுளைக் கரைத்துவிட்டதாக 
காவல்துறை அறிவிப்பு செய்தது, 

ஆயிரம் கண்கள் 
முறைத்துக் கொண்டிருந்தன 
மறுபடியும் அவளைச் சாகடிப்பதற்கு, 

ஜனநாயகத்தை 
ஏழு குண்டுகள் துளைத்துவிட்டு 
வண்டியேறி ஓடின... 

நாங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு 
தேடிக் கொண்டிருக்கிறோம், 

தோட்டாக்களின் துப்பாக்கி 
நாளையே 
தேசிய கொடியை ஏற்றலாம், 

ஆரத்தியெடுக்கும் தட்டுகளை 
நாங்கள் 
அப்போதுதான் தயார் செய்து வைப்போம், 

கேள்விகள் இறந்து கிடப்பதால் 
ஆச்சரியக் குறிகள் 
வானத்தில் பறக்கின்றன, 

நாங்கள் பதுங்கிக் கொள்கிறோம் 
குண்டுமழைகள் 
எப்போதும் பொழியலாம். 

தொலைந்து போன ஜனநாயகத்தை 
தேடிக் கொண்டிருக்கிறார் மன்னர், 

யாரும் அதை 
காப்பாற்றி விடக்கூடாதென்ற பயம், 

முதலுதவி செய்து கொண்டிருக்கிறோம் 
மரணக் குழியில் வைத்து, 

யாரும் மூச்சு விட்டு விடாதீர்கள்... 
இன்னமுமது 
கொஞ்சம் உயிரோடித்தானிருக்கிறது. 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts