
படம் உதவி : தினகரன் நாளிதழ்
கவிதை:
இந்தப் பேனாவை
அந்தப் பிணத்தின் அருகிலிருந்துதான் எடுத்தேன்,
அது மட்டுமே உயிர்ப்போடு
என்னை முறைத்துக் கொண்டிருந்தது,
அதன் முள் முனையில்
இறந்தவன் உதிரம் ஒட்டிக் கொண்டிருக்க,
எழுதிப் பார்த்த முதல் வார்த்தையே
புரட்சியென்று தெரித்து விழுந்தது...
சற்றே நடு நடுங்கி மசி உதறினேன்
சிதறிய மசித் துளிகளில்
புரட்சியின் கவிதையொன்று புறப்பட்டு வந்தது,
காட்சிகள் மாறும் போது நாங்களிருவரும்
சிறை கம்பிகளுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தோம்.
பேசிப் பேசியே அந்தப் பேனா
என்னையுமொரு பேனாவாக்கியது,
நாங்களிருவரும் இப்போது
ஒரு கதையை எழுதிக் கொண்டிருந்தோம்,
அதில், எழுத்துகள் காயம் செய்து சாகடிக்க,
பேனாக்கள்தான்
துப்பாக்கிகளாய் இயங்குகின்றன,
ஆட்சியாளர்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்,
சட்டென்றே பேனாவின் முள்முனை குத்த
நிமிர்ந்து பார்க்கிறேன்
கனவைப் பிடுங்கிய தொலைக்காட்சியில்
அரசின் நாடக மரியாதையுடன்
கவுரிலங்கேஷ் அடக்கம் செய்யப் படுகிறார்,
அனிதாவிற்காக நீதி கேட்டவர்கள்
சட்டத்தின் குற்றவாளிகளாக
கைதாகிக் கொண்டிருந்தார்கள்...
எனக்கும் மட்டும் எதற்கு வம்பு...
நானும் என் காதலியும்
கவிதை வனத்திற்குள்ளோடி
மறைவாய் ஒளிந்து கொள்கிறோம்...
பேனா மட்டும் இன்னமும் அநாதியாய்
அங்கேயேதான் கிடக்கிறதாம்.
சிறு குறிப்பு : நானும் மறந்து விடாதிருக்க
கவுரிலங்கேஷ் - பாசிச படுகொலைக்கு
பலியானவர்
அனிதா - நீட் படுகொலையில் உயிரை விட்டவர்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment