Wednesday, 6 September 2017

யாருக்குமே தெரியவில்லை

dead of old man painting க்கான பட முடிவு

நினைவடுக்குகளின் மிச்சம் மீதிகளில் 
அவள் மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தாள், 
'அப்பா' என்றழைத்த 
அறுபது வயது மகனின் குரல் 
அலைகளுக்குள் அமுங்கியே போனது, 
'தாத்தா' என்றழைத்த ஆசைப் பேரனை 
காதுகளால் பார்க்க முடியவில்லை, 
'மாமா' என்றழைத்த மருமகள்கள் 
மங்கலாகி மறைந்து போனார்கள், 
உறவுகள் 
'என்னைத் தெரிகிறதா' என்ற கேள்விக்கு 
யார் இவர்களென்று கண்கள் பார்த்தன, 
கட்டிலைப் பகிர்ந்த 
கண்ணாட்டியின் படத்தைக் காட்டி 
ஏதேதோ கேட்டார்கள்... 
சின்னதாய் சிரிப்பு மலர்ந்து 
சிலிரென்றே அதுவும் உடைந்து போனது, 
'பூங்கோதை அங்கென்ன செய்ற?' 
என்று யாரோ விளித்த வார்த்தைக்கு 
சட்டென்றே திரும்பிய விழிகள் 
அங்கேயே நிலைக்குத்தி நின்றது! 
பெரிசு போயிடுச்சென்று 
நாடிப் பிடித்தவன் சொல்லிவிட்டு நகர, 
நினைவடுக்குகளின் மிச்சம் மீதிகளில் 
அவள் மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்த கதை 
யாருக்குமே தெரியவில்லை. 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts