
இருட்டை இழுத்துப் போர்த்தி உட்கார்ந்திருந்தேன்,
வெளிச்சமொன்று
என் தோளில் கையைப் போட்டது.
ஆம் அதே சூஃபிக் கிழவன் உட்கார்ந்திருந்தான்,
கவலை சூழ்ந்ததற்குக் காரணம் கேட்டான்
வாழ்க்கை இருட்டாய் இருக்கிறதென்றேன்,
தொலைக்காத சிரிப்பை மீளுரு செய்தான்,
இருட்டு எப்படியிருக்கும்? என்றான்
வெளிச்சத்தைத் தின்றிருக்கும் என்றேன்,
மீண்டும் அதே சிரிப்பு...
இரவின் வானத்தில் என்ன தெரிகிறதென்றான்,
நிலவையும் நட்சத்திரங்களையும் பட்டியலிட்டேன்,
பகலின் வானத்திலெனக் கேட்டான்
சூரியன் மட்டும் என்றேன்...
இப்போது தெரிகிறதா எது வெளிச்சமென்று
திருப்பிக் கேட்டவன்
எழுந்து போ இருட்டுதான் வெளிச்சம் என்றான்.
எனக்குள்ளொரு வெளிச்சம்
மெல்ல எட்டிப் பார்த்தது
அவன் தூரத்தில் சென்று கொண்டிருந்தான்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment