Tuesday, 5 September 2017

நல்லாசிரியர்

நல்லாசிரியர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

உச்சிக் குடுமி வாத்தியாரிடம் 
ஓடிப் போய் வணக்கம் சொல்வதில் 
அத்தனை பிரியம் அவனுக்கு , 
சிலேட்டை 
தொட்டும் பார்க்க மாட்டார், 
அடிக்கும் கோலால்தான் 
அத்தனையும் அளப்பார், 
கணேசன் என்ற பெயரை 
பறகணேசன் என்றழைப்பதும் 
பாசமென்றே கணக்கு வைத்திருந்தான், 
அவனுக்கும் புரியாது 
ராமானுஜனனும், ஶ்ரீதரனும் 
அவரருகில் அமர்வது ஏனென்று, 
அவர்கள் தப்பாக எழுதிய விடைகளுக்கும் 
பேஷ் இப்படிதான் எழுதணுமென்பார், 
இவன் சரியாகப் போட்ட கணக்கிற்கும் 
அடியாகதான் விடை கிடைத்தது, 
அழைப்பிற்காய் ஓடிவரும் அவன் அப்பனும் 
சொல்லுங்க சாமி யென்றுதான் நிற்பான் 
காலில் செருப்பிருக்காது, 
துண்டு கக்கத்தில் ஒளிந்திருக்கும், 
உன் பையன் படிக்க மாட்டான் 
உழவு வேலைக்கு ஒத்தசைக்கு வச்சிக்க 
உருப்படுவான் என்பார் 
வீட்டிற்கு வந்தாள் அம்மா அழுவாள் 
அப்பன் அடிப்பான் , 
அடியின் தழும்புகளோடு படித்த கணேசன் 
விவரமறிந்து 
தமிழ் வளவனாய் பெயர் மாறினான், 
கடவுள்களின் மேல் அவ்வளவு கோபம், 
தகுதியில்தான் தாசில்தாரானான், 
முடியாமல்தான் வந்து நிற்கிறார் 
உச்சிக் குடுமி வாத்தியாரும்
அவருக்கும் அவனைத் தெரியவில்லை 
அவனுக்கும் அவர் மீதான 
மரியாதைக் குறையவில்லை, 
சொல்லுங்க சார்! 
முதியோர் பென்ஷனுக்காக 
தகுதியாகக் கையெழுத்துப் பதிகிறான், 
தொட்டு தூக்கி வாசல் வரை விடுகிறான், 
மனசு மட்டும் இப்பவும் குமைகிறது 
தீட்டு இப்ப எங்கே போச்சி வாத்தியாரே ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts