Sunday, 3 September 2017

அனிதாவின் மரணம்



Image may contain: 1 person

வராத கவிதையை வைத்துக் கொண்டு 
நானென்ன செய்ய முடியும்? 
எழுத மறுத்த பேனாவின் முனையை 
உடைத்தெறிகிறேன்... 
கிழித்தெறிந்தத் தாள்களிலெல்லாம் 
அந்தப் பெண்தான் 
இயலாமையாய்ச் சிரிக்கிறாள், 
ஒரு சமூகத்தின் வெளிச்சம் 
இருள்சூடிக் கிடக்கிறதே 
யார்தான் விளக்கேற்றப் போகிறார்கள்? 
வெளிச்சத்தைத் திருடிக் கொண்டவர்கள் 
விளக்கிற்கு விளக்கம் சொல்வது 
வேடிக்கையாகவிருக்கிறது, 
அவளின் 
-போராட்டக் கண்களுக்குத் தெரியவில்லை 
நீதிதேவதையின் வீட்டில் 
சாத்தான்கள் கூடு கட்டியிருப்பது, 
மனுதர்மம் மாறுவேடத்தில் நுழைந்து 
செங்கோலைப் பிடுங்கி ஆட்சி செய்வது 
அவளுக்கெப்படித் தெரியும்? 
எழுதுகோல் பிடித்த கைகளில் 
தூக்குக் கயிற்றைத் திணித்துவிட்டு 
எழுந்துவா என்று சொன்னால் 
அவளெப்படி எழுந்து வருவாள்? 
அறுவாள் எடுக்கத் தெரியாத பெண்ணவள் 
மரணத்தை 
மனமில்லாமல் ஏற்றுக் கொண்டாள், 
நீதியின் கால்களை ஒடித்துவிட்டு 
நன்றாக நடக்கிறதென்று சொல்பவர்களை 
நாம், என்னதான் செய்யப் போகிறோம்? 
அவர்களின் சுரணையற்ற பேச்சுகளுக்கு 
கை தட்டும் நம் கைகளும்தான் 
தரமிழந்து போகாதா? 
சுய மரணத்தால் தீ மூட்டியவள் 
தீப்பந்தங்களை நம் கைகளில்தான் 
திணித்துவிட்டுப் போயிருக்கிறாள், 
மாணவர்களே 
தூக்குக் கயிறுகளையெல்லாம் தூக்கியெறியுங்கள் 
துஷ்டர்களைத் தீக்கிரையாக்கும் 
தீப்பந்தங்களே நீங்கள்தான், 
தயவு செய்து , 
தீப்பந்தங்களைத் தீக்கிரையாக்கிவிட்டு 
சாக்கடைகளுக்குள் புதைந்து போகாதீர்கள், 
முடிக்காத கவிதைகளாகவே புறப்படுங்கள் 
முடிக்கும் போதாவது 
முடிவென்றவொன்று நிலையாகியிருக்கட்டும். 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts