Thursday, 7 September 2017

இறுதிக் குறிப்பு

தொடர்புடைய படம்

பகுப்பாய்வில் 
நான் இறந்துவிட்டதாக உறுதி செய்தார்கள், 
என்னைத் துளைத்த தோட்டாக்களை 
வெளியில் கிடத்தி 
முகக் குறிப்புகள் எழுதிக் கொண்டார்கள், 
துளைத்த காயத்தின் ஆழம் அளந்து 
விசையின் வேகம் கணக்கிட்டார்கள், 
சுடப்பட்ட தூரமும் 
தொகையாய் வந்து அமர்ந்து கொண்டது, 
துப்பாக்கியின் முகவரி 
கிடைத்துவிடுமென்று பேசிக் கொண்டார்கள், 
நெஞ்சைச் சிதைத்து 
நுரைத்துக் கிழிந்த நுரையீரலை நுட்பமாய் 
பாட்டிலில் நுழைத்தார்கள், 
சிறு சிறு இறைச்சித் துண்டங்களும் 
சேகரத்தில் சேர்ந்து கொண்டன, 
என்னைப் பொதிந்து மூட்டைக் கட்டியவர்கள், 
குறிப்புகளின் கோப்பை மூடி வைக்கும் முன்பாக 

'இனி இந்தக் கோப்பும் 
இவனைப் போலவே இறந்து கிடக்கும்' 
என்ற இறுதிக் குறிப்பை 
அழியாத மையால் 
தெரியாத வார்த்தைகளால் எழுதி வைத்தார்கள், 
தூங்கிக் கிடந்த என்னிதயம் 
சற்றே துடித்துவிட்டு மீண்டும் இறந்து விட்டதை 
அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை. 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts