அவர்கள்
சோழிகளை உருட்டத் தொடங்கி விட்டார்கள்,
நாம்
வேடிக்கையைப் பார்க்க தொடங்கி விட்டோம்,
கட்டங்களில் நகரும் காய்களாக
நம்மைத்தான் அவர்கள் நகர்த்துகிறார்கள்,
ஒரு வீணையும் புல்லாங்குழலும் கூடப் போதுமானது
நம்மை மயக்கத்திலாழ்த்திவிட,
அவர்கள்
வெட்டப் பட்ட காய்களைக் கணக்கெடுக்கிறார்கள்
நாம்தாம்
அங்கே துடைத் தெரியப் படுகிறோம்...
காதலியின் கவிதைப் புடவையைப் போர்த்தியுறங்க
யாரும் நமக்குக் கற்றுத் தர தேவையில்லை,
என்னை நிர்வாணமாகப் பார்க்கும் கண்களை
நான் பார்ப்பதும் இல்லை,
என்னெதிரில் இறந்து கிடக்கும் சோதரனின் உதிரம்
அவனைப் பற்றியெழுத
நிரப்பிக் கொண்டால் போதுமானது,
நாம் காய்களாக இருக்கும் வரை ஆட்டம்
அவர்கள் கைகளில்தான் இருக்கும் என்பதும்
நிதர்சனமான உண்மை,
அதோ போகும் அவள் கூந்தலின் வாசம்
என் வனத்தை அசைத்துப் பார்க்கிறது...
நான் என் வேலையைப் பார்க்கிறேன்...
நீங்களும் உங்கள் வேலையைப் பாருங்கள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment