
புரிந்தது போல் நடந்து கொள்கிறோம்,
ஆனால்
நம்மையே நாம் புரிந்து கொண்டதில்லை,
இரகசியங்களை வைத்துக் கொண்டே
நடமாடுகிறோம்...
பதில் தராத கேள்விகள்தாம்
நம்மை ஆழமாகப் புதைத்து வைத்திருக்கின்றன,
சொல்ல மறந்த கதைகளை விட
இங்குச் சொல்ல மறுத்த கதைகள்தான் அதிகம்,
தீப் பற்றியெரியும் வனத்தில்
இங்கு யார்தான் தீக்குச்சி?
அழுக்குகளைக் கழுவி விட்டு
அழுக்குகளை உடுத்த நமக்கு மட்டுமே தெரியும்,
சித்தார்த்தன் வீதியில்
சிதறிக் கிடக்கின்றன நிழற் பதுமைகள்,
நூல் பிடித்தேறி
ஆதாமின் ஆப்பிள் கனியை பறித்துக் கொள்கிறோம்,
சாத்தான் நிம்மதியாக உறங்குகிறான்...
இரகசியங்களை
ஏதனின் தோட்டத்தில் இறக்கி வைத்திருக்கிறேன்
ஒரேயொரு மூலிகை குளியலுக்காக..
ஈவாவின் ஆப்பிள் என்னை விரும்பி அழைக்கிறது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment