பிக் பாஸின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள்
சொல்கிறார்கள்,
'நீ சரியில்லை,அவன் சரியில்லை,அவள் சரியில்லை'
ஒரு நாளும் அவர்கள் சொல்லிக் கொண்டதில்லை
தான் சரியில்லையென்று,
அவர்களிடம் காதலும் காமமும் மட்டுமல்ல
நட்பும் கூட
நாடகத்தனமாகத்தான் பூக்கிறது,
இழிவாய் பேசக் கற்றுக் கொண்டவர்கள்
குடும்பமாய் வாழ்வதாகப் பொய் சொல்கிறார்கள்,
அப்படியென்றால் எலிமினேஷன் எதற்கு?
அரசியல் பேச தைரியமில்லாதவர்களுக்கு
சாதிய திமிர் மட்டும் தலை தூக்கி நிற்கிறது,
பணம் வாங்கிக் கொண்டு
குடும்பமாய் வாழும் கூத்தை,
இவர்களிடம் நாமும் கற்றுக் கொள்ள வேண்டுமாம்,
மகா நடிகரொருவர் மாண்புடன் சொல்கிறார்,
இவர்களிடத்தில் எதை நாம் எதிர் பார்க்கிறோம் ?
இந்தக் கதை இங்கேயே இருக்கட்டும்....
இந்தியாவின் வீட்டிற்குள் நுழைந்தால்,
நம்மால் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர்கள்
அவர்களே பிக் பாஸ் ஆகிவிடுகிறார்கள்,
சலுகைகளையும் திட்டங்களையும்
காட்சி விறுவிறுப்பிற்காகக் கட்டாயம் சேர்க்கிறார்கள்,
இவர்களையும்
பன்னாட்டு நிறுவனங்கள்தான் மோல்டிங் செய்கின்றன,
இவர்களும் அவர்களைப் போலவே
தங்களை மட்டுமே சரியென்கிறார்கள்,
இவர்களும் வசதிகளைப் பூசிக் கொண்டு
ஏழைகளுக்காக வாதாடுகிறார்கள்,
இவர்கள்தான் நமக்கும் கற்றுத் தருகிறார்கள்
நாம் எப்படி வாழ வேண்டும்,
எதை நாம் சாப்பிட வேண்டுமென்று,
இங்கேயும் நாம் வெறும் பார்வையாளர்கள்தான்,
நம் விமர்சனங்களை அவர்களின் காதுகள்
எப்போதுமே வாங்கிக் கொள்வதில்லை
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment