
ஆயிரமாயிரம் கதைகளை
சுமந்து கொண்டே நகர்கிறது
அந்தத் தொடர் வண்டி,
ஓர் ஓரத்தில்
நானும் உட்கார்ந்திருக்கிறேன்,
என் கதையும்
அதற்குப் பரிச்சயம்தான்... ,
சில அழுகைகளும் சில சிரிப்புகளும்
கூடவே பயணம் செய்கின்றன,
வாழ்க்கையின் படிமங்களை
இழுத்துச் செல்லும் வண்டி
அதன் கதையை
யாருக்கும் அது சொன்னதில்லை,
மகிழ்ச்சிகளை
காட்சிகளாய் விரித்துக் காட்டி மகிழ்கிறது,
சோகங்களை
சன்னல் காற்றால் தூங்க வைக்கிறது,
அதனால்
அது மட்டும்தான் செய்ய முடியும்...
வெடித்துவிடும் மன அழுத்தத்தால்
டடக் டடக் சப்தங்கள்
இதயத் துடிப்பாய் மேலோங்குகின்றன ,
ஜங்ஷனில் நின்று பெரு மூச்சு விடுகிறது,
காலன் காலனாய் தண்ணீரை அருந்துகிறது,
மீண்டும் மெல்ல நகர்கிறது....
ஓடிவந்து ஏறுகின்றன
சில அழுகைகளும் / சில சிரிப்புகளும்....
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment