
கையை நீட்டினேன்
கை குலுக்கினாள்.
'தானொரு நடிகை' என்றாள்
ஒப்பனைகளும்
உடல் மொழியும்
உறுதிச் செய்தது.
மூன்றுப் படங்கள்
முடித்திருப்பதாகச் சொன்னாள்...
'மூன்றுமே
மோசமான படங்கள்'
என்பதை உண்ர்ந்தவளாக!
'முதன்மை நாயகன் நடிப்பில்
தானும் நடிப்பது
பெருமை' என்றாள்,
அவன் செய்த சில்மிசங்களை
மறைத்தவளாக!
'வயது
பதினேழின் தொடக்கம்' என்றாள்...
இருபத்தி யேழின்,பிறப்பு சான்று
கண் முன் வந்து போக!
'காட்சிக்கு தேவை யென்றால்
கவர்ச்சியாய் நடிப்பேன்' என்றாள்...
என் பார்வையின்
கோணத்தை யுணர்ந்து,
ஆடைகளைச் சரி செய்தவள்!
'அவளின் அம்மா
ஜமின் குடும்பமாம்?'
சொல்லும் போதே
வயிற்று பிழைப்பிற்கு
பாத்திரம் கழுவிய அம்மா
வந்து போனாள்!
'நடிக்க வரவில்லையென்றால்,
மீடியாவில்
நுழைந்திருப்பேன்' என்றாள்...
அது,
அவளின் கனவென்பது
கண்களில் தெரிந்தது!
மீண்டும்,கை குலுக்கி,
"நீங்கள்,
நல்ல நடிகை"என்றேன்
பொருள் உணர்ந்து சிரித்தாள்!
அவள்,
கண்களின் ஓரம்
சின்னதாக
கண்ணீர்க் கோடு!
நிச்சயம்,அது
மகிழ்ச்சியால் அல்ல!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment