கேள்விக் குறிகளை நிரப்பிக் கொண்டு
காத்திருக்கிறது அந்த வெள்ளைத் தாள்,
அதன் அருகின் தேநீர் வாசனை
அறையை நிறைக்கிறது,
எழுதும் பொருளின் முனை
சிந்தனையைச் சொறிந்து கொண்டிருக்க,
கசங்கிய தாள்கள்
வடிவம் பெறாமல் சிதைந்து கிடக்கின்றன,
கவிதையொன்றும்
வடிவம் பெறுவது அத்துணைச் சுலபமில்லை,
கவிதை எழுதுபவன் இப்படி ஆரம்பிக்கிறான்,
'கவிதையை விடத் தேநீர் மிகவும் சுவையானது'
தேநீரை அருந்திய கவிதை
உற்சாகமாய்
அடுத்த வரிக்குத் தாவுகிறது,
ஆம், இரசனைதான்
இரண்டையும் ருசிக்கச் செய்ய முடியும்,
கொஞ்சம் இருங்கள்,
சூடு ஆறும் முன்பாக
தேநீரையும் சற்று ருசித்துக் கொள்கிறேன்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment