
நானொரு திருடனென்றால்
நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்,
என் கவிதைகள் அனைத்தும்
உங்களிடமிருந்து திருடப் பட்டவைதான்,
உங்களின் சோகங்களையும்
கண்ணீரையும்
திருடிக் கொண்டன என் கவிதைகள்,
நிலவிலிருந்தும், இரவிலிருந்தும்
சில கவிதைகளைத் திருடியிருக்கிறேன்,
என் காதலையே திருடி
கவிதையாக்கியவன் நான்,
போராட்டங்களைத் திருடியிருக்கிறேன்,
புத்தனையும், சித்தனையும் கூட
நான் விட்டதில்லை,
இலக்கியத் திருட்டுகள் எனக்கு
அதிகம் பிடிக்கும்,
இயற்கையைத் திருடி
என் கவிதைகளுக்குப் பந்தல் போட்டிருக்கிறேன்,
மௌனத்தைத் திருடுவது
கை வந்த கலை,
வார்த்தைகளுக்காகவே
என் சிந்தனைகளையும் திருடியிருக்கிறேன்,
இத்தனை திருட்டும்
ஒரே ஒரு முத்தத்தால் விளைந்ததுதான்,
அவள் இதழொழுக்கிய ரசம்
என்னைத் திருடனாக்கியது,
அவளென்னை திருடியதால்
நானும் திருடனாகிப் போனேன்...
அவள் பெயர்
உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்,
'தமிழ்'
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment