
எங்களின் இரவுகளும் பகல்களும்
வெப்பங்களால் சூழப் பட்டிருக்கிறது...
மௌனத்தை வெடி வைத்துத் தகர்த்துவிட்டு
புத்த விகாரங்களுக்கு
ஐகிப் பானாக்களால் அலங்காரம் செய்கிறார்கள்,
இங்குக் கனவுகளின் தேசம் கட்டமைக்கப் படுகிறது
ஊமைகளாய் வாழச் சொல்லும் உத்திரவுகளோடு,
ஏழைகளாய் வாழ்வது எத்துணைக் கொடுமையென்று
இவர்களுக்கு எப்படித் தெரியும்?
சிகப்புக் கம்பளத்தில் நடக்கும் இவர்களின் கால்களுக்கு
உழுவானின் கால்களைப் பற்றிய கவலைக் கிடையாது,
நீங்கள் உண்ணும் உணவில்
அவனது உதிரம் கலந்திருக்கிறதே
எப்படிப் பிரிக்கப் போகிறீர்கள் ?
நீங்கள் வாங்கும் மூச்சுக் காற்றைக் கூட
அவன் வைத்த மரங்கள்தானே சுத்தம் செய்கின்றன!
உங்களது உடைகளில் ஒளிந்திருக்கும்
அவனது உழைப்பை நீக்கி விட்டால்
நீங்கள் எப்போதும் நிர்வாணம் ஆகி விடுவீர்கள்...
உங்கள் உடலின் உதிரங்களில்
அவனது உப்புதானே நிறைந்திருக்கிறது....
நீங்கள் இறந்த பிறகு யாரும் உங்களை
விண்வெளியில் அடக்கம் செய்யப் போவதில்லை,
உலகம் ஒரு யுகத்தை விட்டு ஒரு யுகம்
மாற்றிக் கொள்ளும்...
கனவு தேசங்களின் கற்பனையை விட,
ஒரு கைப்பிடி கஞ்சி எவ்வளவோ மேலானது,
அதுவே எங்களுக்குப் போதுமானதும் கூட.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment