
யாரவது ஒன்று
எதையாவது ஒன்றை
எல்லோரும்
பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்,
பேசாமல் இருப்பது
இப்போது
யாருக்குமே சாத்தியமில்லை,
பேசுவதற்கான காரணங்கள்
எளிதில் கிடைத்து விடுகின்றன,
படிக்கும் போதும்
உறங்கும் போதும் மட்டும்
பேசாமல் இருந்தவர்கள்,
இப்போது
அதையும் தொலைத்து விட்டார்கள்,
கைப் பேசிகளுடன்
அவர்களது பேச்சு
காரணமேயில்லாமல் நீள்கின்றன,
கைப்பேசிகளும் அவர்களுடன்
யாருக்காகவோ
எதையாவது பேசுகின்றது,
செய்திச் சேனல்களும்
எத்தையாவதொன்றைப் பேசி
எல்லோரையும்
பேச வைத்து விடுகின்றது,
பேசாமல் இருந்தால்
'நீயென்ன பிணமா?' என்று
கேட்டு விட்டுப் போகிறார்கள்,
இப்போது கூட ஒருவர்
புத்தனைப் பற்றித்தான்
பேசிக் கொண்டிருக்கிறார்,
மௌனம்தான் சிறந்ததென்று
அவரது பேச்சு முடிந்தது,
இப்போது எல்லோரும்
அவரைப் பற்றித்தான்
பேசிக் கொண்டு கலைகிறார்கள்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment